எஸ்.பாலச்சந்தர் அவர்களின் திரைப்படம் என்றாலே என்றைக்குமே தனி ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும். அவருடைய படங்கள் அந்தக் காலத்திலேயே தனி பாணியில் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான விறுவிறுப்பும் தரமும் நிறைந்து அதற்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்திருந்தன. இது நிஜமா, அவனா இவன், பொம்மை, நடு இரவில் போன்ற படங்கள் எந்தக் காலத்திலும் ரசிக்கக் கூடியவை. குறிப்பாக அவனா இவன் மிகவும் பரபரப்பாக பேசப் பட்ட படம்.

அந்த அவனா இவன் திரைப்படத்தில் நாயகன் தன் காதலியை கொலையை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் உலா வருவார், அடுத்த திருமணத்திற்கும் தயாராவார். . ஆனால் இரு குழந்தைகள் அதனைப் பார்த்து விடும். அந்த கொலை நிரூபிக்கப் பட்டதா, அவர் மறுமணம் புரிந்தாரா இல்லை காவலில் சிக்கினாரா என்பதை திரையில் காணுங்கள். ஆனால் அந்தக் கொலைக் காட்சியில் எஸ்.பாலச்சந்தரின் பின்னணி இசை... அட்டகாசமாக இருக்கும். குழந்தைகள் வேடிக்கை பார்ப்பதில் தொடங்கி காதலியுடன் சரசமாக பேசிக் கொண்டே அவளைக் கொலை செய்து அவள் உடலை அப்புறப் படுத்தி விட்டு, காரில் செல்வது, பின்னர் குழந்தைகள் ஓரிடத்தில் நின்று இவரைப் பற்றி வியந்தும் பயந்தும் பேசுவது.. இது தான் காட்சி.

இந்தக் காட்சியின் பின்னணி இசையைத் தான் இப்போது கேட்க உள்ளீர்கள். மிகவும் சில கருவிகள் தான். வயலின், புல்லாங்குழல், பேங்கோஸ் இவற்றுடன் பியானோ மேதை ஹாண்டல் மேனுவல் அவர்களின் பியானோ இசை ...

நம்முடைய இசை அமைப்பாளர்கள் எந்த அளவிற்கு உலகத் தரத்தை அளிக்க வல்லவர்கள் என்பதை அன்றே நி்ரூபித்து விட்டார் எஸ்.பி. அவர்கள். குறிப்பாக வீணையில் இப்படிப் பட்ட புதுமையான நாதமும் ஒலியும் உண்டாக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

அவனா இவன் கொலைக்காட்சியின் பின்னணி இசை

http://www.mediafire.com/?ssx2cnh6ks26knk

கொலையின் சிறு சாயல் கூட தெரியாத அளவிற்கு அதை மறைத்து விட்டு அடுத்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார் கதாநாயகன். அந்த திருமணப் பத்திரிகையை தங்களுக்கு மிகவும் வேண்டியவரிடம் கொடுக்க குழந்தைகள் ஆவலுடன் வருவார்கள். அந்த வீட்டில் பார்த்தால் அவர்கள் பார்த்த அந்த கொலைகாரன் இருப்பான். பயந்து ஓடி வரும் குழந்தைகள் தாங்கள் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு அவனா இவன் என வியந்தும் பயந்தும் பேசுவார்கள். இந்தக் காட்சியில் தான் இயக்குநரின் சாமர்த்தியம் வெளிப் படுகிறது. படம் தொடங்கி கிட்டத் தட்ட 50 நிமிடங்கள் கழித்து குழந்தைகள் இந்த வசனம் பேசும் போது அதனைத் தொடர்ந்து படத்தின் டைட்டில் காட்சி இடம் பெறுகிறது. இதுவும் அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப் பட்டது.

அந்த டைட்டில் காட்சியின் பின்னணி இசை... மீண்டும் மீண்டும் தாங்கள் அதனைக் கேட்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை... கேளுங்கள் கேளுங்கள் ... கேட்டுக் கொண்டே இருங்கள்..

அவனா இவன் டைட்டில் இசை

http://www.mediafire.com/?7w4w02bzuzhh3zk