குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே
(குழலூதி)

அழகான மயிலாடவும் - மிக மிக
அழகான மயிலாடவும்
காற்றில் அசைந்தாடும் கொடிபோலவும்

அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே
தனைமறந்து புள்ளினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிது என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு
(குழலூதி)

மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில் ஆகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
(அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே...)
(குழலூதி மனமெல்லாம்...)