Results 1 to 10 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இசையாலணையும் பெயர்..


    தாலாட்டில் துவங்கி ஒப்பாரியில் நிறைவுறும் ஒவ்வொரு மனித வாழ்விலும் இசையென்பது உடன் வரும் நிழலைப்போல தொடர்ந்து வந்துகொண்டே தானிருக்கிறது இன்றும்.. ஆதியில் விலங்குகளை விரட்டவும்,பயங்களைத் துரத்தவும் ஒலியெழுப்பி சப்தத்தை மௌனத்திடமிருந்து மொழி பெயர்த்தார்கள், நாகரீகம் வளர,வளர சப்தம் சங்கீதமானது. இன்றைய காலத்தின் கணக்குப்படி பார்த்தால் ஒரு தலைமுறையென்பது 50 முதல் 60 வயதிற்குள்ளேயே முடிந்துவிடும் அபாய கட்டத்தில் அறுந்து விழாமல் தொக்கி நிற்கிறது, இந்தத் தலைமுறையின் இசைத் தட்டினை 30 வருடங்கள் பின்னோக்கி பின்னோக்கிச் சுழற்றினால் இசையின் சகல பரிவாரங்களையும் ஒற்றை மனிதனாக சுமந்து நிற்கிறார் இளையராஜா என்ற பண்ணைபுர பாட்டுக்கார ராசய்யா.. இந்திப்பட பாடல்களின் ஆக்கிரமிப்பு தமிழ்த்திரைப்பட பாடல் ரசிகர்களின் காதைத் திருகிக் கொண்டிருந்த தருணங்களில் தமிழ்ப்பாரம்பரிய நாட்டார் வழக்கு இசையை உயிர்ப்புடனும்,துடிப்புடனும் பாடல்களில் மெருகேற்றி நம் செவிக்கு உணவாக்கிய உன்னத கலைஞன் இளைய ராஜா!! இசைத்தட்டிலிருந்து தொழில்நுட்பம் ஆடியோ கேசட்டிற்குள் குடியமர்ந்த காலத்தில்,எங்கள் வீட்டில் வானொலிப்பெட்டி இருந்ததே ஆடம்பரமென நினைத்த பொற்காலம் அது, இலங்கை வானொலியில் மாலை 4.00 முதல் 4.30 வரை"இசைக்களஞ்சியம்" என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.ஆண்குரலில் தனித்து ஒரு பாடல்,பெண் குரலில் தனித்து ஒருபாடல்,ஜோடிக்குரலில் ஒருபாடல்,பலகுரல் கலந்து ஒருபாடல், நகைச்சுவை உணர்வேந்திய ஒரு பாடலென 5 பாடல்கள் வரும். அடுத்து ஒலிக்க இருப்பது,ராகதேவன் இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் வைர வரிகளில் ,எஸ்பிபியின் மயக்கும் குரலில் பொன் மாலைப்பொழுது பாடல்,நிழல்கள் படத்திலிருந்து.. காற்றலைகளில் தவழ்ந்த படி என இராஜேஸ்வரி சண்முகம் அம்மாவின் தேமதுரக்குரல் அறிமுகப்படுத்தியது இளையராஜாவை எனக்கு 6வயதில். அன்றிலிருந்து இன்று வரை அவரது இசை மீது தீராக்காதல். இசை என்பது செவிகளையும் தாண்டி மனதின் ஜீவ நாடிகளுக்குள் பசையற்று கிடக்கும் உயிரணுக்களை ஒன்றாகத்திரட்டி மயிலிறகால் வருடுவதைப் போலிருக்க வேண்டும்.அதைச் செவ்வெனச் செய்வது இளையராஜாவின் இசை மட்டுமே . இது என் மனது தீர்மானித்து விடாப்பிடியாக சொல்வது.!! பால்யம் தீர்ந்ததும், பருவத் தினவுகளை பருக ஆயத்தமாகி விடுகிறது காலம்,அப்பருவத்தினவுகள் நுரைத்து அடங்கி நீர்த்து ஏகத்திற்கும் ஏங்கி நிற்கிற தனிமை சூழ் வெறுமை என் மனதை பிசைகிற போதெல்லாம்," தனியானா என்ன? துணையாக நான் பாடும் பாட்டுண்டு" எனஆறத்தழுவி ஆறுதல் கரம் நீட்டுவதும் இளையராஜா இசைதான்.. உண்பதைப்போல,நீர்பருகுவதைப்போல,சுவாசிப்பதைப்போல,அன் றாட தேவைகளாகவும்,அத்யாவசியமானதாகவும் இளையராஜாவின் இசையேந்திய பாடல்களுடன் பயணித்து வரும் என்னைப் போன்று ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள் ,வேலை,சூழ்நிலை காரணமாக குடும்பங்களை பிரிந்து வாழும் நகரத்து மனிதர்களின் தனிமை குடியிருக்கும் இரவின் கதவை தட்டினால் அங்கே துணைக்கு இளையராஜாவின் இசை மெலிதாக கசிந்தபடிதான் இருக்கிறது இன்றளவிலும்.!! "தாய்மடி+தகப்பன் தோள்கள்= இளையராஜா இசை"என ஒருமுறை நான் எழுதிய போது,"காதலியின்முத்தம்+ நண்பனின் தோள்கள் = ரஹ்மான் இசை" என எதிர்ப்பதமாக என் தலைமுறைக்கு முந்தைய தாய் ஒருவர் எழுதியிருந்தார்கள், இதை எதிர்ப்பதம் என்று சொல்வதை விட முந்தைய தலைமுறைகளின் ரசனைகள் ஊசியிலை மரங்களைப்போல் உயர்ந்தும்,ஆல,அரச மரக்கிளைகள் போல அகன்றும்,அடர்ந்தும் பரவி நிறபது ஆரோக்யமான விஷயமே!! இன்றைய சூழலில் அனிருத் வரையிலான இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசிக்கிற அளவு ரசிப்புத்தன்மை விரிந்திருந்தாலும்,கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் குழந்தையிடம் வீட்டிலுள்ள உறவுகளில் யாரைப் பிடிக்கும் எனக் கேட்டால் தயக்கத்தோடும்,குழப்பத்தோடும் யோசித்து அம்மாவைக் கை காட்டுவதைப்போல,என் மனதும் பிடித்த இசையமைப்பாளர் என்று இளையராஜாவைக் கை காட்டுகிறது!! ஜூன் 2 ல் பிறந்தநாள் காணும் இசைஞானியை வாழ்த்த வயதில்லை,வணங்க மனதும் வயதும் இருக்கிறது, அவர் நீடூழி வாழ எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்!! _ பாலா!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •