இயக்குநருக்காக எதிர்பார்க்கப்படும் படங்களில் அமீர் படங்களுக்குத் தனி மரியாதை உண்டு. சர்வதேச விருதுகளை சகட்டுமேனிக்கு அள்ளிவந்த ‘பருத்திவீரன்’ படத்துக்குப்பின் அவர் இயக்கும் படமாக அமைகிறது, ஜெ.அன்பழகன் தயாரிக்கும் ‘ஆதிபகவன்’. ஜெயம் ரவி ஹீரோவாகும் இந்தப்படத்துக்கு அமீரின் வழக்கப்படியே யுவன் இசையமைக்க, அவரே ஹீரோவான ‘யோகி’க்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.பி.குருதேவும், தேவராஜும் ஒளிப்பதிவு செய்கிறார்கள். அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படமாக இதுவரை பேசப்பட்டு வந்த ‘கண்ணபிரான்’, ஆதிபகவனாக மாறிய காரணத்தையும், படம் பற்றியும் சொன்னார் அமீர்.

‘‘கண்ணபிரான் ஸ்கிரிப்ட் அப்படியேதான் இருக்கு. ‘ஆதிபகவன்’ வேற கதை, வேற களம். இது முழுக்க வெகுஜனப்படம். அந்தமாதிரிப் படங்கள் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன். ‘பருத்திவீரனு’ம் அப்படிப்பட்ட வெகுஜனப்படம்தான். இங்கே ரசிகர்கள்கிட்ட பெரிய வெற்றி அடைஞ்சு ரசிக்கப்பட்ட பிறகுதான் அது ஃபெஸ்டிவல்களை நோக்கிப்போச்சு. ஆனா அதுவே எனக்கு சுமையாவும் ஆகிப்போச்சு. நான் ஆரம்பிக்கிற ஒவ்வொரு படத்துக்கும் விருது முத்திரை விழுந்துடுச்சு. அதில இருந்து என்னை விடுவிச்சு ‘ஆதிபகவன்’ படத்தைப் பாருங்க...

இது ஒரு காதல் படம். கண்மூடித்தனமான காதலை இதில சொல்லப்போறேன். நகரம் சம்பந்தப்பட்ட கதைங்கிறதால பெரும்பாலும் சென்னைலயும், பாடல்கள் இதுவரை போகாத வெளிநாடுகள்லயும் எடுக்கப்படும். காதல் படம்கிறதால முத்தக்காட்சியும் இருக்கும். பத்துப் பதினைஞ்சு படங்கள் மதுரையில தயாராகறதால, இனி மதுரைப்பக்கம் போக மாட்டேன். வழக்கம்போலவே இதுவும் பெரிய பட்ஜெட் படம்தான். என் முதல் படத்திலேர்ந்தே என் பட்ஜெட் அதிகமா இருக்கும்னு சொல்லித்தான் ஆரம்பிக்கிறேன். அதுக்குத் தோதான தயாரிப்பாளர் தேவைக்காகத்தான் ஜெ.அன்பழகன் இதுக்குத் தயாரிப்பாளரா இருக்கார். நல்ல சினிமாவை ரசிக்கத் தெரிஞ்ச அவர், அந்த ரசனைக்காகவே தயாரிப்பாளரா ஆகியிருக்கார்.