குடும்பத்துக்காக காதலைத் துறந்த கோபி

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30மணிக்கு ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடர் நாளுக்கு நாள் வேகம் பிடிக்கிறது.

ஒரே நாளில் காதலைச் சொல்லி அன்றே பிரியவும் செய்த கோபி-மலர் ஜோடிதான் இப்போது பெண்கள் மத்தியில் ஒரே பேச்சாக இருக்கிறது. என்ன ஆனாலும் மலருக்கு கோகுலுடன் திருமணம் நடக்காது. அவர் கோபியுடன் தான் சேருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், கோகுல்- மலர் திருமணம் நடந்தே விட்டது. அந்த திருமணத்துக்கு கோபியே நாதஸ்வரம் வாசிக்க நேர்ந்தது அதிர்ச்சி இணைந்த சுவாரசியம்.


"எதற்காக இந்த தடாலடி முடிவு?'' தொடரின் தயாரிப்பாளரும், இயக்குநருமான திருமுருகனிடம் கேட்டால், "திருமணத்தின் போது கோபி ஏதாவது சாகசம் செய்து மலரை திருமணம் செய்திருந்தால் தான் தடாலடி. இதுதான் யதார்த்தம். காதலித்த பெண்ணாக இருந்தாலும் தந்தையின் கவுரவத்திற்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் நேசித்த மீசையைக் கூட துறந்து நாதஸ்வரத்தைக் கையில் எடுக்கிறான் கோபி. நம்முடைய ஆசைகளைவிட குடும்பத்தின் நலனுக்காக வாழ்பவன்தான் உண்மையிலேயே குடும்பப் பற்று உள்ளவன்.

பெண்களுக்கும் இது பொருந்தும். மலரும் அப்படிப்பட்ட பெண்தான்.

குடும்பத்துக்காக தன் காதலைப் பூட்டிக் கொண்டுவிட்டாலும் மலருக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது, கோபி எந்த அளவுக்கு துணையாக இருப்பான் என்பதை ரசிகர்கள் இப்போது தெரிந்து கொண்டிருக்கிறார்கள். `சைக்கோ' மனநிலைக்கு மாறிவிட்ட கோகுலிடம் இருந்து மலரைக் காப்பாற்றி காரைக்குடிக்கே அழைத்து வரும் கோபி, அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதுதான் கதையின் அடுத்தகட்ட திருப்பம்'' என்கிறார், திருமுருகன்.

"மலர் திருமண வாழ்வில் மனம் உடைந்து திரும்பி வந்திருக்கும் சூழல் மகாவை எப்படி பாதிக்கிறது? மலரும் கோபியும் சந்திப்பதையே வெறுக்கும் மகா என்ன முடிவை எடுக்கிறாள்? அவளுடைய முடிவால் கோபி திருமணத்துக்கு சம்மதிக்கும் நிலை வருமா? இதற்கிடையே தன் காதல் தோற்றாலும் தன் தங்கை காமுவின் காதலை ஜெயிக்க வைக்கப் போராடும் கோபியின் முயற்சிகள் வெற்றி அடைந்ததா? திருமண நாள் அன்றே பிரிந்து சென்ற மலரை சந்தித்த கோகுல், அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிகள் எடுத்தானா? இதுபோன்ற பல எதிர்பார்ப்புக்குரிய கேள்விகளுக்கு விடை வரும்காட்சிகளில் தொடரும்'' என்கிறார், திருமுருகன்.




நன்றி: தினதந்தி